சாமித்தோப்பில் பாலபிரஜாபதி அடிகளார் வயதானவர்கள் தங்க ஒரு இடம், அனாதை இல்லம், மற்றும் அன்னதானசாலையை போன்றவற்றை நிறுவி அதை நிர்வாகித்து வருகின்றார்கள். முத்துக்கிணற்றின்; பக்கத்தில் உள்ளது அன்புவனம். அருள்நூலில் ஒவ்ஒருவரும் தர்மம் செய்ய வேண்டும் என அய்யா வைகுண்டர் அறிவுறுத்தி உள்ளார். அதற்கேற்ப அன்புவனம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த அன்புவனம் உள்ள இடத்தில் அய்யா தானே உழுது பயிரிட்டுள்ளார்.
அன்புவனத்தில் அன்னதானசாலையும் உள்ளது. ஏழைகளுக்கு உணவு தருவது நம் முன்னோர்கள் கடைபிடித்தப் பழக்கம். அன்னதானம் செய்பவர்கள் தேவலோகம் செல்வார்கள் என்ற நம்பிக்கை உண்டு. புனித நூல்களான அகிலத் திரட்டு மற்றும் அருள் நூல்களும் அதை அறிவுறுத்துகின்றன. ஆகவே அய்யாவின் விருப்பப்படி அந்த அன்னதானசாலை நிறுவப்பட்டது. தினமும் இருநூறுக்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு அன்னதானம் செய்யப்படுகின்றது. பண்டிகை நாட்களில் இரண்டாயிரத்துக்கும் மேலானவர்கள் அன்னதானம் பெறுகின்றனர். அரசு மானியம் இந்த திட்டத்திற்கு கிடைப்பதில்லை என்பதினால் பாலபிரஜாபதி அடிகளார் மக்களிடம் இருந்து பெறும் நன்கொடைகள் மூலம் இதை நடத்தி வருகின்றார்.
பாலபிரஜாபதி அடிகளார் மற்ற மடாதிபதிகளைப் போல் தனி மரமாக வாழ்ந்து கொண்டு இருக்காமல்;, குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றார். அவருக்கு குழந்தைகளும் உண்டு. ‘இல்லத்தை விட்டு தவம் இலைக்கான் வெறும் தவம்’ என்பது அய்யாவின் வாக்கு. ஆகவே அவர் கூறியது போலவே குடும்ப வாழ்க்கையில் இருந்து கொண்டே நன்னெறி வாழ்க்கை முறையைக் கடைப் பிடிக்கின்றார். பாலபிரஜாபதி அடிகளாருடைய மனைவி திருமதி இரமணிபாய் அவர்கள் அன்புவனத்தை பராமரித்துக் கொண்டு இருக்க வயதான அவருடைய அன்னையோ அவருக்கு மற்ற உதவிகளை செய்தவண்ணம் அங்கு இருக்கின்றார். முதலில் அந்த இடத்தின் மேற்கூறை ஓலையினால் வேயப்பட்டிருந்தது. அன்புச்சங்கு என்ற மாத இதழ் அங்கிருந்து வெளியாகின்றது. ஒரு மரவேலை செய்யும் பிரிவும் துவக்கப்பட்டு; உள்ளது. ஆலயத்திற்கு வேண்டிய தெய்வ வாகனங்கள் அங்குதான் செய்யப்படுகின்றன. மற்றவர்கள் கொண்டு வந்து விடும் பசுக்களைப் பராமரிக்க கோசாலை உள்ளது. அன்புவனத்தின் பக்கத்தில் சிறிய குளமும் உள்ளது. ஒவ்ஒருவரும் வேதத்தில் கூறப்பட்டுள்ளபடி முப்பத்தி இரண்டு அறம் ( சேவைகள் ) செய்ய வேண்டும் என அய்யா கூறி உள்ளார். அதில் ஒரு அறமாக அன்புவனம் நிறுவப்பட்டது. அந்த இல்லத்தில் உள்ள குழந்தைகளை தன்னுடைய குழந்தைகள் போல பாலபிரஜாபதி அடிகளாருடைய மனைவி திருமதி இரமணிபாய் அவர்கள் பராமரித்து வருகின்றார். அன்புவனத்தில் அன்றாட வேலைகளான தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவது, கோசாலையில் உள்ள மாடுகளை பராமரிப்பது போன்றவற்றை அந்த குழந்தைகள் செய்து வருகின்றனர். இரண்டு ஆசிரியர்கள் அந்தக் குழந்தைகளுக்கு கல்வி அறிவு தருகின்றனர்.
மிகவும் வயதாகிவிட்ட இருபது குடும்பத்தினர் அந்த இடத்தில் தங்கி உள்ளனர். தனிக் குடும்ப வாழ்க்கையில் கிடைக்கும் இன்பங்களினாலும், பொருளாதார நிலைகளின் காரணமாகவும்,பல குடும்பங்களில் கணவன்-மனைவி இருவரும் வேலைக்குப் செல்லத் துவங்கிவிட்டனர். அதனால் நம் முன்னோர் கடைபிடித்து வந்த ஒரே குடும்பம் என்ற பழக்க முறையும் மாறி விட்டது. அப்படிப்பட்ட நிலையில் கைவிடப்பட்ட வயதானவர்கள் வந்து தங்கி அமைதியுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் வகையில் இந்த இல்லம் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் அங்கு வேறு எந்த வேலையும் செய்யத் தேவை இல்லை. தினம் ஒன்றுக்கு மூன்று முறை உணவும் தரப்படுகின்றது. அன்புவனத்தில் தொடர்வழிபாட்டுக்கூடம் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் அணையாது தொடர்ந்து எரிந்து கொண்டு இருக்கும் விளக்கு வைக்கப்பட்டு உள்ளது. அந்த விளக்கு அணையாமல. எண்ணை ஊற்றி எரிய விட்டுக் கொண்டு இருப்பதே அந்த வயதானவர்கள் செய்யும் வேலை. தொடர்வழிபாட்டுக்கூடத்தில் பக்தர்கள் அய்யா சிவ சிவா, அரகரா அரகரா என்ற மந்திரத்தைத் தொடர்ந்து ஓதிக் கொண்டு இருக்கின்றனர்.
அன்புவனத்தின் சிறப்பான செயல்பாடுகள் குறித்து செய்திகள் ஜெர்மனி மற்றும் ஜப்பானிய போன்ற வெளிநாட்டு பத்திரிகைகளில் வெளியாகி உள்ளன என்றாலும் இந்தியாவில் அன்புவனத்தைப் பற்றி எந்த பத்திரிகைகளிலும் செய்திகள் வெளி வரவில்லை. பல்வேறு பிரபலங்கள் அந்த இடத்திற்கு வந்து தங்களுடைய கருத்துக்களை அங்குள்ள விருந்தினர் பதிவேட்டில் எழுதிவிட்டுச் சென்றுள்ளனர். அவர்களில் முக்கியமானவர்கள் திரு நடேசன் பால்ராஜ், திரு குமரி ஆனந்தன், திரு கே.கே.எஸ்.எஸ்.இராமசந்திரன், திரு அரங்கநாயகம் மற்றும் திரு நீலலோகிதாசன் போன்றவர்கள். பணப் பற்றாக்குறை இருந்தும் கூட அன்புவனத்தை பாலபிரஜாபதி அடிகளால் எப்படியோ சமாளித்தபடி நிர்வாகித்து வருகின்றார். அதற்குக் காரணம் அய்யா வைகுண்டருடைய அருள்தான் எனப் பெருமையுடன் கூறுகின்றார்.
– நன்றி சாந்திப்பிரியா