தெற்கு திருவான்கூர் பகுதிகளில் இருந்த கீழ்குடி மக்களின் முன்னெற்றத்திற்கென முதலில் தம் பணியினை அய்யா துவக்கினார். அதற்கு முன்னோடியாக சமுதாய, மத மற்றும் கலாச்சார சீர்திருத்தங்களை கொண்டு வரத் துவங்கினார். அந்த காலத்தில்; ஆலயங்கள் உயர் ஜாதி பிராமண இந்துக்களின்; கட்டுப்பாட்டில் இருந்தன. ஆகவே கீழ் ஜாதியினர் எனப்பட்ட மக்கள் கடவுளை வணங்க புதுமையான வழி முறையை அய்யாகொண்டு வந்தார். வேதங்களும் உபனிஷத்துக்களும் மத சம்மந்தப்பட்ட நூல்கள். உபனிஷத்துக்களில் தனி நபர் பற்றிய செய்திகள் நிறையக் கிடையாது என்றாலும் மற்ற நூல்களில் அப்படிப்பட்ட கதைகள் நிறையவே இருந்தன. புராணங்கள் எனப்பட்டவை வேதம் மற்றும் உபனிஷத்திற்கு அடுத்தபடியானவை. அவை அனைத்தும் சமிஸ்கிருத மொழிகளில் இருந்ததினால் அவற்றை சாதாரண குடி மக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.
எளிமையான மதம்
மதக் கொள்கைகள் மிகவும் எளிமையாக இருந்தால் மட்டுமே அதை அனைவரும் புரிந்து கொள்ள முடியும் என அய்யா நினைத்தார். இந்து மதத்திலோ எண்ணற்ற தெய்வங்கள் உண்டு. ஒவ்ஒரு தெய்வத்திற்கும் தனித் தனியான ஆராதனைகள் உண்டு. அவற்றை சாதாரண குடி மகனால் சரி வரக் கடை பிடிக்க முடியாது. திதியும், பிரதோஷ காலமுமே கடவுளை ஆராதிக்க சிறந்த நேரம என நினைத்தனர்;. அவற்றை கடை பிடிப்பதும் சுலபம் அல்ல. குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட எண்ணையை விளக்கேற்ற பயன்படுத்துவதின் மூலம் குறிப்பிட்ட பலன் கிடைக்கும். இவை நடைமுறையில் இருந்த நம்பிக்கைகள்.
ஆகவே அவற்றுக்கு மாறாக எளிமையான முறையில் ஆலயம் அமைக்கப்பட்டாலே போதும், வழிபாடு எளிமையாக அமைந்து விடும் என நினைத்த அய்யா நிழல் தாங்கல்கள் என்று அழைக்கப்பட்ட சாதாரண கட்டிடங்களில் இறை வழிபாட்டைத் துவக்கினார். அங்கு வழிபட வேண்டும் எனில் ஒவ் ஒருவரும் நல்ல ஆரோக்கியமாகவும், சுத்தமான உடம்புடனும், மனதுடனும் வரவேண்டும். அய்யாவை எவர் வேண்டுமானாலும் எந்த முறையிலும் வழிபடலாம். பூஜைகள் போன்ற நியதிகள் கிடையாது, பூஜாரிகளும் கிடையாது, கற்பூர ஆரத்தி, ஊதுபத்தி ஏற்றுதல் போன்றவை கிடையாது. ஏன் புஜாரிகள் கூடக் கிடையாது. ஏழை பணக்காரன் என்ற வித்யாசம் இல்லை. ஆண்கள் தலையில் முண்டாசு கட்டிக் கொண்டுதான் வரவேண்டும் என்பது அல்லாமல் நல்ல வெளுத்த வேட்டி உடுத்தி மேலாடை இன்றி வரவேண்டும் என்ற நியதி இருந்தது.
மொழி
நிழல்தாங்கல்களிலும், ஆலயத்திலும் பயன்படுத்தப்படும் மொழி தமிழ் மொழியாக இருக்க வேண்டும். அய்யா எழுதிய புனித நூல் தமிழ் மொழியில்தான் உள்ளது. அய்யா வைகுண்டர் ஆலய வழிபாட்டிற்கு தமிழை பயன் படுத்தியதின் காரணம் ஆலயத்திற்கு வரும் அனைவரும் அங்கு நடப்பதைத் தெரிந்து கொள்ள முடியும் என்பதினால்தான். அனைத்து மதத்தினரும் அதை கடைபிடிக்க முடியும். கல்யாணத்தில் ஓதப்படும் மந்திரங்கள் கூட தமிழ் மொழியில்தான் இருந்தன.
பூஜை, பூஜாரிகள் மற்றும் உருவ வழிபாடு
ஆலயத்தில் பூஜைகள் செய்வதை அய்யா வைகுண்டர் விரும்பவில்லை. சாமித்தோப்பில் உள்ள கருவறை மலர்களினால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. அதை பணிவிடை என அழைக்கின்றனர். அதை செய்பவர்களுக்கு பணிவிடைக்காரன் என்ற பெயர் உண்டு. ஜாதி பேதம் இன்றி எவர் வேண்டுமானாலும் பணிவிடை செய்ய முடியும்.
அய்யா வைகுண்டர் உருவ வழிபாட்டை வெறுத்தார். ஒவ் ஒருவரிடமும் கடவுள் இருக்கின்றார் என நம்பினார். கடவுள் இல்லாத இடமே இல்லை எனவும், அவர் அனைத்து இடத்திலும் இருக்கின்றார் என்பதினால் உருவ வழிபாடு ஆலயத்தில் தேவை இல்லை என்று கூறினார்
மிருக பலி
ஆலயங்களில் நடைபெற்றுவரும் மிருக பலிகள் தற்பொழுது பல சமூகத்தினராலும் விரும்பப்படவில்லை. ஆனால் அய்யா வைகுண்டர் அதை 150 வருடத்திற்கு முன்னரே கடைபிடித்தார். திருவான்கூர் சமஸ்தானத்தில் இருந்த மக்களில் பெரும்பான்மையானோர் ஏழைகள். அவர்களுக்கு கடவுள் மீது பக்தியைவிட பயமே அதிகம் இருந்தது. அந்த மக்கள் பலி தரும் பழக்கம் வைத்திருந்தனர். ஆகவே அவற்றைத் தவிற்திடுமாறு தான் எழுதிய புனித நூலின் மூலம் அய்யா அறிவுறை தந்திருந்தார். அகிலத்திரட்டு நூலில் பலயிடுவதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றார்.
எதற்காகஉம்பெயரால் ஈனங்கேழு மாமுனியே
ஆடு கோழி அறுத்து பலியிடார்
அந்த காலத்தில் பெரிய ஆலயங்களில் கூட இந்துக்கள் பலி தரும் பழக்கங்களை கைகொண்டு இருந்தனர். பல ஆலயங்களிலும் உள்ள பலிபீடங்களே அவற்றுக்கு சான்று. அய்யா வைகுண்டர் தமது ஆலயத்தில் தேங்காய் உடைப்பதைக் கூட தடுத்துவிட்டார். ஏன் எனில் அதுவும் ஒரு விதமான பலியே எனக் கூறினார். இன்றும் கூட அது கட்டுப்பாட்டுடன் அய்யா வழி நிழல் தாங்கல்களில் கடைபிடிக்கப்படுவதைக் காணலாம்.
பலி தருவோர் தன்னுடைய பக்தன் அல்ல என்று அய்யா கூறினார். அதை மிகவும் கட்டுப்பாட்டுடன் அவர் கடை பிடித்ததினால் அந்த பழக்கம் அய்யா வழி ஆலயயங்களில் இல்லை. கடவுள் தான் படைத்த எந்த உயிரினமும் படுகொலை செய்வதை பொறுத்துக் கொள்ள மாட்டார் என நம்பினார்.
தர்மயுகமும் தர்மமும்
மனிதன் தோன்றிய காலம் முதலே பல்வேறு சமயங்கள் தோன்றிவிட்டன. ஒவ்ஒரு மதத்தின் கொள்கையும் ஒருவன் நேர்வழியில் நடக்க வேண்டும் என்றே கூறுகின்றன. உலகத்தில் ஏராளமான மதத் தலைவர்கள், போதனைகள் மற்றும் மதங்கள் இருந்தும் மக்களுடைய இன்னல்கள் குறையவே இல்லை. மதத்தின் பெயரால் அக்கிரமங்கள் பெருகி விட்டன. மதத்தின் பெயரால் சச்சரவுகள் ஏற்படும் பொழுது சமாதான குழுக்கள் அமைத்து அறிவுறை தரப்படுகின்றன. ஆனால் அவை எதுவும் நிரந்திரமாக சண்டைகளை தீர்த்து வைக்கவில்லை. ஆகவே மதச் சச்சரவுகள் நிரந்திரமாக தீர வேண்டும் எனில் தர்மம் தழைக்க வேண்டும்.
தர்மம் என்பதுதான் என்ன ? நேர்வழியில் வாழ்க்கையை நடத்திச் செல்வதின் பெயரே தர்மம். அதைக் கடைபிடித்தால் மதச் சண்டைகளொ, சமுதாய சண்டைகளோ, மத மாற்றங்களோ நிகழ முடியாது. அதை அடையவே அய்யா விரும்பினார். ஆனால் அதை திடீர் எனக் கொண்டு வரமுடியாது என்பதினால் தர்மமே இறைவனிடம் சென்றடையும் வழி எனவும், எந்த ஒருவனும் வழிபாட்டுத் தலம் சென்றால் இறைவனை வழிபட்ட பின் வயிறு நிறைந்து திரும்ப வேண்டும். அப்பொழுதுதான் இறைவனுடைய நினைப்பும், நேர்மையும் அவர்களுக்கு இருக்கும் எனவும் நினைத்தார். அந்த நிலையில் வர இருக்கும் யுகமே தர்மயுகம் ஆகும். கலியை அழித்து தர்மயுகத்தை அடைவதே தன் கடமை என்றும் அப்பொழுது உலகில் அக்கிரமங்கள் நடக்காது , ஓரே மதம்தான் இருக்கும் என்றும் கூறினார்.ஒரே அரசின் கீழ் உலகம் இயங்கும், ஆளுபவர், ஆளப்படுவோர் என்ற பேதம் இருக்காது. நோய்களும், ஏழ்மையும் இருக்காது, கடவுளே தர்மமாக இருப்பார். குற்றங்கள் இருக்காது என்பதினால் ஆலயங்களும், காவல் நிலையங்களும், வழக்கு மன்றங்களும் இருக்காது என்றார்.
அய்யா வழி
அய்யா வழியின் சமுதாய மற்றும் மத சீர்த்திருத்தங்கள் மக்களைப் பெரிதும் கவர்ந்தன. அவரை அன்புடன் அய்யா என அழைத்து அவரிடம் தங்களுக்கு இருந்த ஈடுபாட்டை காட்டினர். அவர் நடத்திக் காட்டிய அற்புதங்களினால் அவர் மும்மூர்திகளின் அவதாரமான பிரும்மாதான் என்று நம்பினர். கல்வி அற்றவர்கள்கூட அவர் காட்டிய நன்னெறிப் பாதையில் நடந்தனர். அந்த காலத்தில் அய்யா என்பவர் உருவில் கடவுளே வந்திருக்கின்றார் என மக்கள் கருதினர். அவர் இயக்கத்தில் பெருவாரியான அளவில் பல இடங்களில் இருந்தும் வந்து மக்கள் இணைந்துள்ளனர். அவர் காட்டிய வழிபாட்டு முறை உலகெங்கும் பரவும் என அருள் நூலில் குறிப்பிட்டு இருக்கின்றார்.
–